Monday, September 7, 2015

சின்ன பொக்கம்பட்டி - ஸ்ரீ காளி அம்மன் கோவில் - முளைப்பாரித் திருவிழா

கிராமப்புறங்களில் கொண்டாடப்படுகின்ற திருவிழாக்களில் முளைப்பாரித் திருவிழா முக்கியமான ஒன்று. உலகமயமாதல் சூழ்நிலையில் அனைத்துமே மாறி வருகின்றன. அப்படி மாறாத் தன்மையோடு இருப்பவைகள் கிராமங்களில் கொண்டாடப்படும் திருவிழாக்கள் என்று சொல்லலாம். வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கொண்டாடப்படும் இத் திருவிழாக்களின் போது கிராமங்கள் தனிக்களையோடு தான் காட்சி அளிக்கின்றன.
பொதுவாக, கிராமக் காவல் தெய்வ வழிபாடுகள் என்பவை நாள் வழிபாடு, சிறப்பு வழிபாடு, ஆண்டு வழிபாடு என்ற வகைகளில் தான் கொண்டாடப்படுகின்றன. நாள் வழிபாடு என்பது கிராமத்துத் தெய்வங்கள் இருக்கும் இடத்தைக் கடக்கும் பொழுதோ, அல்லது கிராம மக்களில் தனிப்பட்டவர்களுக்கு ஒரு சிறு சங்கடங்கள் வரும் பொழுதோ அம்மனை வழிபடுவார்கள். இந்த வழிபாட்டில் கிராம மக்கள் எந்தச் செலவும் செய்வதில்லை சிறப்பு வழிபாடு என்பது வருடத்தில் முக்கியத் தினங்கள் என்று சொல்லப்படுகின்ற பொங்கல் விழா, தமிழ் வருடப் பிறப்பு போன்ற நாட்களில் நடத்தப்படுகிறது. ஆண்டு வழிபாடு என்பது தான் கிராமப்புறங்களில் மிகவும் முக்கியமாக முழு ஈடுபாட்டோடு கொண்டாடப்படுகின்ற விழா.

இந்த விழாக்களின் பொழுது தான் கிராமக் காவல் தெய்வங்கள் நன்கு அலங்கரிக்கப்பட்டு 10 நாள் விழாவாகக் கொண்டாடப்படுகின்றன. இந்தப் பத்து நாள் விழாவில் ஆண்கள் காவல் தெய்வங்களை அலங்கரித்து அதனைக் கிராமம் முழுவதும், ஊர்வலம் எடுத்து வருதல், விழா ஏற்பாடுகளைச் செய்தல் போன்ற காரியங்களைக் கவனிப்பார்கள். ஆனால் முழுக்க முழுக்கப் பெண்களால் நடத்தப்படுவது முளைப்பாரி எடுத்தல் விழா.
குறிப்பாகக் கிராமப்புற வாழ்க்கையில் பெண்களின் பங்கு முக்கியமானது. அதனால் தான் பெண்கள் மட்டுமே ஒன்று சேர்ந்து காவல் தெய்வங்களுக்குத் திருவிழா ஆரம்பமான முதல் நாள் அன்று ஒரு கூடையில் கரம்பை மண்ணைப் போட்டு அதில 9 வகையான நவ தானியங்களை ஒன்றாக்கி அதில் போட்டுக் தண்ணீர் தெளித்து முளைப்பாரிப் பயிரை உருவாக்குவார்கள் இதில் என்ன விஷேசம் என்றால் முளைப்பாரிகள் சூரிய வெயில் படாத ஓர் இருட்டு அறையில் தான் உருவாக்கப்படுகின்றன. இந்த முளைப்பாரிகள் உருவாக்கப்படும் அறைகளில் காற்றுக் கூடச் செல்ல முடியாத அளவுக்கு இறுக்கமாகவும் இருட்டாகவும் இருக்கும். இப்படித் திருவிழா ஆரம்பித்த முதல் நாளில் இடப்படுகின்ற முளைப்பாரிகள் திருவிழாவின் 9ம் நாள் அன்று பெரிய அளவில் வளர்ந்து அற்புதமாகக் காட்சி அளிக்கும். 9ம் நாள் திருவிழாவின் பொழுது உருவாக்கப்பட்ட முளைப்பாரிகளை அதன் உரிமையாளர்களான பெண்கள் தங்களது தலையில் சுமந்து கிராமத் தெய்வங்களோடு ஊர்வலம் வருவார்கள். பின் அம்மனுக்குப் பூஜை செய்த பின் முளைப்பாரிகளை ஊரில் இருக்கும் குளத்தில் மொத்தமாகக் கொண்டு போய்ப் போட்டு விடுவார்கள். இது தான் முளைப்பாரித் திருவிழாக்களின் வரையறை.
இந்த வரையறை சில கிராமங்களுக்கு வேண்டுமானால் மாறுபடலாம். சில கிராமங்களில் பூக்குழி நடைபெறும் பொழுது எடுத்துச் செல்வார்கள். சில கிராமங்களில் முளைப்பாரிக்கு என்று தனியாக விழா நடத்துவார்கள். மற்றபடி விழா கொண்டாடப்படும் முறைகள் எல்லாமே ஒன்றாகத் தான் இருக்கும் என்கிறார் வரலாற்றுப் பேராசிரியரான புகழேந்தி.
முளைப்பாரித் திருவிழா கிராமப் பெண்களைக் கௌரவிக்கும் விழாவாகப் பெண்களால் முழுமையாகச் செயல்படுத்தப்படுகிறது. முளைப்பாரியைப் பெண்கள் எடுப்பது ஒரு வேண்டுதல் தான். தங்கள் வாழ்வும், தங்கள் விளை நிலங்களின் விளைச்சலும் அமோகமாக இருக்க வேண்டும் என்பதற்காகப் பெண்கள் முளைப்பாரி விழாவில் முளைப்பாரி எடுத்து வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள். பொதுவாக இந்த முளைப்பாரிகளை உருவாக்குவதற்கென்றே கிராமங்களில் சில பெண்கள் இருப்பார்கள். அவர்களிடம் முதலில் பெயர்களையும் அதற்குத் தேவையான பொருட்களையும் கொடுத்து விட வேண்டும். பின் அனைத்து வேலைகளையும் அந்தப் பெண்கள் தான் பார்த்துக் கொள்வர். அதில் ஒரு பெண் மட்டும் தான் முளைப்பாரி வளரும் இருட்டு அறைக்குள் சென்று காலை மற்றும் மாலை நேரங்களில் தண்ணீர் தெளிப்பது, சாம்பிராணிப் புகை போடுவது, முளைப்பாரி வளரும் 6ம் நாளில் அதற்குச் சிக்கல் எடுப்பது போன்ற வேலைகளைச் சிரமம் பார்க்காமல் செய்வார். இதற்காக உருவாக்கப்படும் அறை சாமி அறை என்றும், அதில் யாரும் நுழையக் கூடாது என்று எழுதப்படாத சட்டமே இருக்கிறது. இந்த முளைப்பாரிப் பயிர்கள் நன்கு வளர வேண்டும் என்பதற்காகக் கும்மிப்பாட்டுப் பாடும் பழக்கம் இன்றும் அழியாமல் இருந்து வருகிறது.